Header Ads

மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்



ஒரு சில விநாடிகள் ஒதுக்கி, ஒரு நாளில் எத்தனை மணி நேரம் நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துகிறீர்கள் என எண்ணிப் பாருங்கள். சராசரியாக, ஒருவர் குறைந்தது நான்கு மணி நேரம், ஒரு நாளில் பயன்படுத்துவதாகக் கணக்கிட்டுள்ளனர். நண்பர்களை அழைத்துப் பேச, வரும் அழைப்புகளை ஏற்றுப் பேச, உள்ளூர் கடையில் பொருட்கள் வாங்க, அது இலவசமாகத் தரும் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்திட, நமக்கான பொருட்கள் வாங்கிட எனப் பல்வேறு பணிகளை முடிக்க, ஸ்மார்ட் போன்கள் பயன்படுகின்றன.
படங்களை எடுக்க, விடியோ படங்களைத் தரவிறக்கம் செய்திட, முக்கிய ஆவணங்களைப் பாதுகாக்க, வங்கிக் கணக்குகளை நிர்வகிக்க எனப் பல முக்கிய செயல்பாடுகளை நாம் ஸ்மார்ட் போன்கள் மூலம் அடிக்கடி மேற்கொள்கிறோம். இந்த செயல்பாடுகளுக்கான சில அடிப்படை தகவல்கள் நம் போன்களிலேயே பாதுகாத்து வைக்கப்படுகின்றன. எனவே, நம் அன்றாட வாழ்வில் மிக முக்கியமான, பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய சாதனமாக நம் ஸ்மார்ட் போன்கள் அமைந்துவிட்டன. இதனைத் தொலைத்துவிட்டால் அல்லது இதன் இயக்கம் முடங்கிவிட்டால் என்ற எண்ணமே நம்மை நடுங்க வைக்கிறது.
மொபைல் போன்கள் திருடப்படுவது குறித்த அறிக்கை ஒன்று, நாளொன்றுக்கு டில்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் 50 மொபைல் போன்கள் திருடப்படுவதாகத் தெரிவிக்கிறது. காவல் நிலையங்களில் பதியப்படாத திருடப்பட்ட போன்கள் எவ்வளவு என்று தெரியவில்லை. இவற்றில் பல ஸ்மார்ட் போன்கள் கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்து விடுகின்றன. எனவே, நாம் நம் ஸ்மார்ட் போன்களைப் பாதுகாக்க என்ன செய்திடலாம் என்று இங்கு பார்க்கலாம்.
 குறிமறையாக்கம் (Encryption):
ஸ்மார்ட் போனில் பதியப்படும் தகவல்களைக் குறிமறையாக்கம் (Encryption) என்ற முறையில் சுருக்கிப் பதிவு செய்திட வேண்டும். ஆண்ட்ராய்ட் போனில் இதற்கான வசதி உள்ளது. ஒவ்வொரு முறை நாம் போனை ஸ்டார்ட் செய்கையில், அதற்கான பாஸ்வேர்ட் அல்லது பின் எண் ஒன்றைத் தர வேண்டியதிருக்கும். இதனைக் கொடுத்தவுடன், ஸ்மார்ட் போனில் உள்ள குறிமறையாக்கப்பட்ட டேட்டா அனைத்தும் மீண்டும் பழையபடி டெக்ஸ்ட்டாக அமைக்கப்படும். இது நமக்கு சில வேளைகளில் சோம்பல் தரும் செயலாக இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் கைகளில் நம் போன் சிக்கினால், இந்த பாஸ்வேர்ட் அல்லது பின் எண் இல்லாமல் திருடர்களால் ஒன்றும் செய்திட முடியாது. இந்த வசதியை இயக்கி வைக்க, ஆண்ட்ராய்ட் போனில் உள்ள Security Settings சென்று மேற்கொள்ளலாம். applock, document locker (Android) and Signal (iOS) போன்ற அப்ளிகேஷன்கள் வழியாகவும், நம் பைல்களைப் பாதுகாத்து வைக்கலாம்.
 திரையைப் பூட்டவும்:
எந்த ஒரு டிஜிட்டல் சாதனத்திற்கும் அதன் திரையைப் பூட்டி வைத்தல், ஓர் அடிப்படையான பாதுகாப்பு வழியாகும். ஏதேனும் ஒரு வடிவமைப்பு, பின் எண் அல்லது பாஸ்வேர்ட் கொடுத்து இதனை லாக் செய்திடலாம். இதற்கும் குறிப்பிட்ட சாதனத்தின் Security Settings சென்று இந்த லாக் செயல்பாட்டை இயக்கி வைக்கலாம். பின்னர், குறிப்பிட்ட காலத்திற்குப் பின், போன் தானாக லாக் செய்திடும் வகையில் அமைக்கலாம். அல்லது பவர் கீயை அழுத்தி, லாக் செய்திடலாம்.
 பழக்கமில்லா வை பி வேண்டாமே:
நாம் எங்கு வை பி கட்டணம் இல்லாமல் கிடைத்தாலும், உடனே அதனைப் பயன்படுத்தத் தொடங்குகிறோம். இதில் தவறில்லை. நமக்கு அத்தியாவசியமாக, இணையத் தொடர்பு தேவை என்றால் மட்டுமே, இலவச பொது இட வை பி இணைப்பைப் பயன்படுத்த வேண்டும். இல்லை எனில் கூடுமானவரை இதனைத் தவிர்ப்பது நல்லது. அல்லது, உங்களுக்கு மொபைல் சேவை தரும் நிறுவனத்திடம் இருந்து, நல்ல டேட்டா திட்டம் ஒன்றைக் கட்டணம் செலுத்திப் பெறுவது நல்லது. இதற்குச் செலுத்தப்படும் கட்டணம் உங்களுக்குக் கட்டுபடியாகும் நிலையில் இல்லை என்றாலும், போனின் பாதுகாப்பு கருதி, இதனை மேற்கொள்ளலாமே! பாதுகாப்பில்லாத இலவச வை பி இணைப்பினைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாமே!
 வைரஸ் எதிர்ப்பு செயலி கொள்க:
நீங்கள், உங்கள் ஸ்மார்ட் போனில், இணையத் தொடர்பு கொண்டு, அதிலிருந்து தகவல்களை, பைல்களைத் தரவிறக்கம் செய்வதாக இருந்தால், வைரஸ் மற்றும் மால்வேர் உங்கள் போனை அடைந்து பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே, வைரஸ் எதிர்ப்பு செயலி ஒன்றை, ஸ்மார்ட் போனில் பதிந்து, இயக்கி வைப்பது நல்லது. இணையத்தில், இலவசமாக AVG Free மற்றும் Avast போன்றவை கிடைக்கின்றன. அல்லது சிறிய அளவில் கட்டணம் செலுத்தி, Norton அல்லது Kaspersky போன்ற வைரஸ் எதிர்ப்பு தொகுப்பினைப் பெற்று இயக்கி வைக்கலாம். இவை, உங்கள் பிரவுசரிடம், பாதிப்பைத் தரும் இணைய தளங்கள் குறித்து எச்சரிக்கை வழங்கிக் கொண்டே இருக்கும்.
 மேம்படுத்தல் முக்கியம்:
நம் ஸ்மார்ட் போனின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மேம்படுத்தப்படும்போது, உங்கள் போனிலும் மேம்படுத்தப்பட்ட பதிப்பினை பதிந்து இயக்கிக் கொள்ள வேண்டும். பெரும்பாலன வேளைகளில், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வைரஸ் நுழையக் கூடிய பிழைக் குறியீடுகள் கண்டறியப் படுவதாலேயே, மேம்படுத்தலுக்கான குறியீடு கொண்ட பைல்கள் வழங்கப்படுகின்றன. எனவே, நம் போனுக்கான கூடுதல் பாதுகாப்பினைப் பெற, ஆப்பரேட்டிங் சிஸ்டம் மேம்படுத்தலை மேற்கொள்வது எப்போதுமே நல்லதும் பாதுகாப்பானதும் ஆகும்

No comments

Powered by Blogger.